Deuteronomy 9 in Tamil

Deuteronomy 9

1. இஸ்ரவேலே, கேள்: நீ இப்பொழுது யோர்தானைக் கடந்து, உன்னிலும் ஜனம் பெருத்ததும் பலத்ததுமான ஜாதிகளைத் துரத்தி, வானத்தையளாவிய மதில் சூழ்ந்த பெரிய பட்டணங்களைப் பிடித்து,

2. ஏனாக்கின் புத்திரராகிய பெரியவர்களும் நெடியவர்களுமான ஜனங்களைத் துரத்திவிடப்போகிறாய்; இவர்கள் செய்தியை நீ அறிந்து, ஏனாக் புத்திரருக்கு முன்பாக நிற்பவன் யார் என்று சொல்லப்படுவதை நீ கேட்டிருக்கிறாய்.

3. உன் தேவனாகிய கர்த்தர் உனக்கு முன்பாகக் கடந்துபோகிறவர் என்பதை இன்று அறியக்கடவாய்; அவர் பட்சிக்கிற அக்கினியைப்போல அவர்களை அழிப்பார்; அவர்களை உனக்கு முன்பாக விழப்பண்ணுவார்; இவ்விதமாய்க் கர்த்தர் உனக்குச் சொன்னபடியே, நீ அவர்களைச் சீக்கிரமாய்த் துரத்தி, அவர்களை அழிப்பாய்.

4. உன் தேவனாகிய கர்த்தர் அவர்களை உனக்கு முன்பாகத் துரத்துகையில், நீ உன் இருதயத்திலே: என் நீதியினிமித்தம் இந்த தேசத்தைச் சுதந்தரித்துக்கொள்ளும்படி கர்த்தர் என்னை அழைத்துவந்தார் என்று சொல்லாயாக; அந்த ஜாதிகளுடைய ஆகாமியத்தினிமித்தமே கர்த்தர் அவர்களை உனக்கு முன்பாகத் துரத்தி விடுகிறார்.

5. உன் நீதியினிமித்தமும் உன் இருதயத்தினுடைய உத்தமத்தினிமித்தமும் நீ அவர்கள் தேசத்தைச் சுதந்தரிக்கும்படி பிரவேசிப்பதில்லை; அந்த ஜாதிகளுடைய ஆகாமியத்தினிமித்தமாகவும், ஆபிரகாம் ஈசாக்கு யாக்கோபு என்னும் உன் பிதாக்களுக்குக் கர்த்தர் ஆணையிட்டுச் சொன்ன வார்த்தையை நிறைவேற்றும்படியாகவும், உன் தேவனாகிய கர்த்தர் அவர்களை உனக்கு முன்பாகத் துரத்திவிடுகிறார்.

6. ஆகையால், உன் நீதியினிமித்தம் உன் தேவனாகிய கர்த்தர் உனக்கு அந்த நல்ல தேசத்தைச் சுதந்தரிக்கக் கொடார் என்பதை அறியக்கடவாய்; நீ வணங்காக் கழுத்துள்ள ஜனம்.

7. நீ வனாந்தரத்தில் உன் தேவனாகிய கர்த்தருக்குக் கடுங்கோபம் உண்டாக்கினதை நினை, அதை மறவாயாக; நீங்கள் எகிப்துதேசத்திலிருந்து புறப்பட்ட நாள் முதல், இவ்விடத்தில் வந்து சேருமட்டும், கர்த்தருக்கு விரோதமாய்க் கலகம்பண்ணினீர்கள்.

8. ஓரேபிலும் நீங்கள் கர்த்தருக்குக் கடுங்கோபம் உண்டாக்கினதினால், கர்த்தர் உங்களை அழிக்கத்தக்கதான உக்கிரங்கொண்டார்.

9. கர்த்தர் உங்களோடே பண்ணின உடன்படிக்கைப் பலகைகளாகிய கற்பலகைகளைப் பெற்றுக்கொள்ளும்படி நான் மலையில் ஏறினபோது, நாற்பதுநாள் இரவும் பகலும் மலையில் தங்கி அப்பம் புசியாமலும் தண்ணீர் குடியாமலும் இருந்தேன்.

10. அப்பொழுது தேவனுடைய விரலினால் எழுதியிருந்த இரண்டு கற்பலகைகளைக் கர்த்தர் என்னிடத்தில் ஒப்புக்கொடுத்தார்; சபை கூடியிருந்த நாளில் கர்த்தர் மலையிலே அக்கினியின் நடுவிலிருந்து உங்களுடனே பேசின வார்த்தைகளின்படியே அவைகளில் எழுதியிருந்தது.

11. இரவும் பகலும் நாற்பதுநாள் முடிந்து, கர்த்தர் எனக்கு அந்த உடன்படிக்கையின் இரண்டு கற்பலகைகளைக் கொடுக்கிறபோது,

12. கர்த்தர் என்னை நோக்கி: நீ எழுந்து, சீக்கிரமாய் இவ்விடம் விட்டு, இறங்கிப்போ; நீ எகிப்திலிருந்து அழைத்துக்கொண்டுவந்த உன் ஜனங்கள் தங்களைக் கெடுத்துக்கொண்டார்கள்; நான் அவர்களுக்கு விதித்த வழியை அவர்கள் சீக்கிரமாக விட்டு விலகி, வார்ப்பிக்கப்பட்ட விக்கிரகத்தைத் தங்களுக்காக உண்டாக்கினார்கள் என்றார்.

13. பின்னும் கர்த்தர் என்னை நோக்கி: இந்த ஜனங்களைப் பார்த்தேன்; அது வணங்காக் கழுத்துள்ள ஜனம்.

14. ஆகையால், நான் அவர்களை அழித்து, அவர்கள் பேரை வானத்தின்கீழ் அற்றுப்போகப்பண்ணும்படி, நீ என்னை விட்டுவிடு; அவர்களைப்பார்க்கிலும் உன்னைப் பலத்ததும் ஜனம் பெருத்ததுமான ஜாதியாக்குவேன் என்றார்.

15. அப்பொழுது நான் திரும்பி மலையிலிருந்து இறங்கினேன், மலையானது அக்கினி பற்றி எரிந்துகொண்டிருந்தது; உடன்படிக்கையின் இரண்டு பலகைகளும் என் இரண்டு கைகளில் இருந்தது.

16. நான் பார்த்தபோது, நீங்கள் உங்கள் தேவனாகிய கர்த்தருக்கு விரோதமாகப் பாவஞ்செய்து, வார்ப்பிக்கப்பட்ட கன்றுக்குட்டியை உங்களுக்கு உண்டாக்கி, கர்த்தர் உங்களுக்கு விதித்த வழியைச் சீக்கிரமாய் விட்டு விலகினதைக் கண்டேன்.

17. அப்பொழுது நான் என் இரண்டு கைகளிலும் இருந்த அந்த இரண்டு பலகைகளையும் ஓங்கி எறிந்து, அவைகளை உங்கள் கண்களுக்கு முன்பாக உடைத்துப்போட்டேன்.

18. கர்த்தரைக் கோபப்படுத்துவதற்கு நீங்கள் அவருடைய சமுகத்தில் பொல்லாப்புச் செய்து நடப்பித்த உங்களுடைய சகல பாவங்கள் நிமித்தமும், நான் கர்த்தருக்கு முன்பாக முன்போலும் இரவும் பகலும் நாற்பதுநாள் விழுந்துகிடந்தேன்; நான் அப்பம் புசிக்கவுமில்லை, தண்ணீர் குடிக்கவுமில்லை.

19. கர்த்தர் உங்களை அழிக்கும்படி உங்கள்மேல் கொண்டிருந்த கோபத்திற்கும் உக்கிரத்திற்கும் பயந்திருந்தேன்; கர்த்தர் அந்த முறையும் என் மன்றாட்டைக் கேட்டார்.

20. ஆரோன்மேலும் கர்த்தர் மிகவும் கோபங்கொண்டு, அவனை அழிக்கவேண்டும் என்றிருந்தார்; அப்பொழுது ஆரோனுக்காகவும் விண்ணப்பம்பண்ணினேன்.

21. உங்கள் பாவக்கிரியையாகிய அந்தக் கன்றுக்குட்டியை நான் எடுத்து அக்கினியில் எரித்து, அதை நொறுக்கி, தூளாய்ப்போகுமட்டும் அரைத்து, அந்தத் தூளை மலையிலிருந்து ஓடுகிற ஆற்றிலே போட்டுவிட்டேன்.

22. தபேராவிலும், மாசாவிலும், கிப்ரோத் அத்தாவாவிலும் கர்த்தருக்குக் கடுங்கோபம் உண்டாக்கினீர்கள்.

23. நீங்கள் போய், நான் உங்களுக்குக் கொடுத்த தேசத்தைச் சுதந்தரித்துக்கொள்ளுங்கள் என்று கர்த்தர் காதேஸ்பர்னேயாவிலிருந்து உங்களை அனுப்புகையிலும், நீங்கள் உங்கள் தேவனாகிய கர்த்தரை விசுவாசியாமலும், அவருடைய சத்தத்துக்குச் செவிகொடாமலும், அவருடைய வாக்குக்கு விரோதமாய்க் கலகம்பண்ணினீர்கள்.

24. நான் உங்களை அறிந்த நாள்முதற்கொண்டு, நீங்கள் கர்த்தருக்கு விரோதமாகக் கலகம்பண்ணுகிறவர்களாயிருந்தீர்கள்.

25. கர்த்தர் உங்களை அழிப்பேன் என்று சொன்னபடியினால், நான் முன்போல் கர்த்தரின் சமுகத்தில் இரவும் பகலும் நாற்பதுநாள் விழுந்துகிடந்தேன்; அப்பொழுது நான் கர்த்தரை நோக்கிப் பண்ணின விண்ணப்பமாவது:

26. கர்த்தராகிய ஆண்டவரே, தேவரீர் உம்முடைய மகத்துவத்தினாலே மீட்டு, பலத்த கையினால் எகிப்திலிருந்து கொண்டுவந்த உமது ஜனத்தையும், உமது சுதந்தரத்தையும் அழிக்காதிருப்பீராக.

27. கர்த்தர் அவர்களுக்கு வாக்குத்தத்தம்பண்ணியிருந்த தேசத்தில் அவர்களைப் பிரவேசிக்கப்பண்ணக் கூடாமற்போனபடியினாலும், அவர்களை வெறுத்தபடியினாலும், அவர்களை வனாந்தரத்தில் கொன்றுபோடும்படிக்கே கொண்டுவந்தார் என்று நாங்கள் விட்டுப் புறப்படும்படி நீர் செய்த தேசத்தின் குடிகள் சொல்லாதபடிக்கு,

28. தேவரீர் இந்த ஜனங்களின் முரட்டாட்டத்தையும், இவர்கள் ஆகாமியத்தையும், இவர்கள் பாவத்தையும் பாராமல், உமது தாசராகிய ஆபிரகாம் ஈசாக்கு யாக்கோபு என்பவர்களை நினைத்தருளும்.

29. நீர் உமது மகா பலத்தினாலும், ஓங்கிய புயத்தினாலும் புறப்படப்பண்ணின இவர்கள் உமது ஜனமும் உமது சுதந்தரமுமாயிருக்கிறார்களே என்று விண்ணப்பம்பண்ணினேன்.