Exodus 29 in Tamil

Exodus 29

1. அவர்கள் எனக்கு ஆசாரிய ஊழியம் செய்யும்படி அவர்களைப் பரிசுத்தப்படுத்தும்பொருட்டு, நீ அவர்களுக்குச் செய்யவேண்டியதாவது: ஒரு காளையும் பழுதற்ற இரண்டு ஆட்டுக்கடாக்களையும் தெரிந்துகொள்வாயாக.

2. புளிப்பில்லா அப்பத்தையும், எண்ணெயிலே பிசைந்த புளிப்பில்லா அதிரசங்களையும், எண்ணெய் பூசப்பட்ட புளிப்பில்லா அடைகளையும் கோதுமையின் மெல்லிய மாவினால் பண்ணி,

3. அவைகளை ஒரு கூடையிலே வைத்து, கூடையோடே அவைகளையும் காளையையும் இரண்டு ஆட்டுக்கடாக்களையும் கொண்டுவந்து,

4. ஆரோனையும் அவன் குமாரரையும் ஆசரிப்புக் கூடாரத்தின் வாசல் முன்பாகச் சேரப்பண்ணி, அவர்களைத் தண்ணீரினால் கழுவி,

5. அந்த வஸ்திரங்களை எடுத்து, ஆரோனுக்கு உள்சட்டையையும், ஏபோத்தின் கீழ் அங்கியையும், ஏபோத்தையும், மார்ப்பதக்கத்தையும் தரித்து, ஏபோத்தின் விசித்திரமான கச்சையையும் அவனுக்குக் கட்டி,

6. அவன் தலையிலே பாகையையும் வைத்து, பரிசுத்த கிரீடத்தைப் பாகையின்மேல் தரித்து,

7. அபிஷேக தைலத்தையும் எடுத்து, அவன் தலையின்மேல் வார்த்து, அவனை அபிஷேகஞ்செய்வாயாக.

8. பின்பு அவன் குமாரரைச் சேரப்பண்ணி, ஆசாரிய ஊழியம் அவர்களுக்கு நித்திய கட்டளையாக இருக்கும்படி, அவர்களுக்கும் அங்கிகளை உடுத்துவாயாக.

9. ஆரோனுக்கும் அவன் குமாரருக்கும் இடைக்கச்சைகளைக் கட்டி, அவன் குமாரருக்குக் குல்லாக்களையும் தரித்து, இப்படியே ஆரோனையும் அவன் குமாரரையும் பிரதிஷ்டைபண்ணுவாயாக.

10. காளையை ஆசரிப்புக் கூடாரத்துக்கு முன்பாகக் கொண்டுவருவாயாக; அப்பொழுது ஆரோனும் அவன் குமாரரும் தங்கள் கைகளைக் காளையினுடைய தலையின்மேல் வைக்கக்கடவர்கள்.

11. பின்பு நீ அந்தக் காளையை ஆசரிப்புக் கூடாரத்து வாசலண்டையிலே கர்த்தருடைய சந்நிதானத்தில் அடித்து,

12. அதின் இரத்தத்தில் கொஞ்சம் எடுத்து, உன் விரலினால் பலிபீடத்தின் கொம்புகள்மேல் இட்டு, மற்ற இரத்தம் முழுவதையும் பலிபீடத்தின் அடியிலே ஊற்றி,

13. குடல்களை மூடிய கொழுப்பு யாவையும், கல்லீரலின்மேலுள்ள சவ்வையும், இரண்டு குண்டிக்காய்களையும், அவைகளின்மேலுள்ள கொழுப்பையும் எடுத்து, பலிபீடத்தின்மேல் தகித்துப்போட்டு,

14. காளையின் மாம்சத்தையும் அதின் தோலையும் அதின் சாணியையும் பாளயத்துக்குப் புறம்பே அக்கினியால் சுட்டெரிக்கக்கடவாய்; இது பாவநிவாரணபலி.

15. பின்பு அந்த ஆட்டுக்கடாக்களில் ஒன்றைக் கொண்டுவந்து நிறுத்துவாயாக; அதினுடைய தலையின்மேல் ஆரோனும் அவன் குமாரரும் தங்கள் கைகளை வைக்கக்கடவர்கள்.

16. அந்தக் கடாவை அடித்து, அதின் இரத்தத்தைப் பிடித்து, பலிபீடத்தின்மேல் சுற்றிலும் தெளித்து,

17. ஆட்டுக்கடாவைச் சந்துசந்தாகத் துண்டித்து, அதின் குடல்களையும் அதின் தொடைகளையும் கழுவி, அவைகளை அந்தத் துண்டங்களின்மேலும் அதின் தலையின்மேலும் வைத்து,

18. ஆட்டுக்கடா முழுவதையும் பலிபீடத்தின்மேல் தகித்துவிடுவாயாக; இது கர்த்தருக்குச் செலுத்தும் சர்வாங்க தகனபலி; இது சுகந்த வாசனையும் கர்த்தருக்குச் செலுத்தும் தகனபலியுமாய் இருக்கும்.

19. பின்பு மற்ற ஆட்டுக்கடாவையும் கொண்டுவந்து நிறுத்துவாயாக; அதினுடைய தலையின்மேல் ஆரோனும் அவன் குமாரரும் தங்கள் கைகளை வைக்கக்கடவர்கள்.

20. அப்பொழுது அந்தக் கடாவை அடித்து, அதின் இரத்தத்தில் கொஞ்சம் எடுத்து, ஆரோனின் வலதுகாது மடலிலும், அவன் குமாரரின் வலதுகாது மடலிலும், அவர்கள் வலதுகையின் பெருவிரலிலும், அவர்கள் வலதுகாலின் பெருவிரலிலும் இட்டு, மற்ற இரத்தத்தைப் பலிபீடத்தின்மேல் சுற்றிலும் தெளித்து,

21. பலிபீடத்தின்மேலிருக்கும் இரத்தத்திலும் அபிஷேகதைலத்திலும் கொஞ்சம் எடுத்து, ஆரோனும் அவன் வஸ்திரங்களும் அவனுடைய குமாரரும் அவர்களுடைய வஸ்திரங்களும் பரிசுத்தமாக்கப்படும்படி, அவன்மேலும் அவன் வஸ்திரங்கள்மேலும் அவனுடைய குமாரர் மேலும் அவர்களுடைய வஸ்திரங்கள் மேலும் தெளிப்பாயாக.

22. அந்த ஆட்டுக்கடா பிரதிஷ்டையின் ஆட்டுக்கடாவானதால், அதிலுள்ள கொழுப்பையும் வாலையும் குடல்களை மூடிய கொழுப்பையும் கல்லீரலின்மேலுள்ள சவ்வையும் இரண்டு குண்டிக்காய்களையும் அவைகளின்மேலுள்ள கொழுப்பையும் வலதுபக்கத்து முன்னந்தொடையையும்,

23. கர்த்தருடைய சந்நிதானத்தில் வைத்திருக்கிற புளிப்பில்லா அப்பங்களுள்ள கூடையில் ஒரு அப்பத்தையும் எண்ணெயிட்ட அப்பமாகிய ஒரு அதிரசத்தையும் ஒரு அடையையும் எடுத்து,

24. அவைகள் எல்லாவற்றையும் ஆரோனின் உள்ளங்கைகளிலும் அவன் குமாரரின் உள்ளங்கைகளிலும் வைத்து, அவைகளைக் கர்த்தருடைய சந்நிதானத்தில் அசைவாட்டப்படும் காணிக்கையாக அசைவாட்டி,

25. பின்பு அவைகளை அவர்கள் கைகளிலிருந்து எடுத்து, பலிபீடத்தின்மேல் சர்வாங்க தகனபலியோடு வைத்து, கர்த்தருடைய சந்நிதானத்தில் சுகந்த வாசனையாகத் தகிக்கக்கடவாய்; இது கர்த்தருக்குச் செலுத்தப்படும் தகனபலி.

26. ஆரோனுடைய பிரதிஷ்டையின் ஆட்டுக்கடாவிலே மார்க்கண்டத்தை எடுத்து, அதைக் கர்த்தருடைய சந்நிதானத்தில் அசைவாட்டப்படும் காணிக்கையாக அசைவாட்டக்கடவாய்; அது உன் பங்காயிருக்கும்.

27. மேலும், ஆரோனுடைய பிரதிஷ்டைக்கும் அவன் குமாரருடைய பிரதிஷ்டைக்கும் நியமித்த ஆட்டுக்கடாவில் அசைவாட்டப்படுகிற மார்க்கண்டத்தையும் ஏறெடுத்துப் படைக்கப்படுகிற முன்னந்தொடையையும் பரிசுத்தப்படுத்துவாயாக.

28. அது ஏறெடுத்துப் படைக்கிற படைப்பானதினால், இஸ்ரவேல் புத்திரர் பலியிடுகிறவைகளில் அவைகளே நித்திய கட்டளையாக ஆரோனையும் அவன் குமாரரையும் சேர்வதாக; இஸ்ரவேல் புத்திரர் கர்த்தருடைய சந்நிதானத்தில் ஏறெடுத்துப் படைக்கிற சமாதானபலிகளில் அவைகளே ஏறெடுத்துப் படைக்கும் படைப்பாயிருக்கவேண்டும்.

29. ஆரோனின் பரிசுத்த வஸ்திரங்கள், அவனுக்குப்பின், அவனுடைய குமாரரைச் சேரும்; அவர்கள் அவைகளை உடுத்திக்கொண்டு, அபிஷேகம்பண்ணப்பட்டுப் பிரதிஷ்டையாக்கப்படுவார்கள்.

30. அவனுடைய குமாரரில் அவன் பட்டத்திற்கு வருகிற ஆசாரியன் பரிசுத்த ஸ்தலத்தில் ஆராதனை செய்வதற்கு ஆசரிப்புக் கூடாரத்தில் பிரவேசிக்கும்போது, அவைகளை ஏழுநாள்மட்டும் உடுத்திக்கொள்ளக்கடவன்.

31. பிரதிஷ்டையின் ஆட்டுக்கடாவைக் கொண்டுவந்து, அதின் மாம்சத்தைப் பரிசுத்த இடத்தில் வேவிப்பாயாக.

32. அந்த ஆட்டுக்கடாவின் மாம்சத்தையும், கூடையிலிருக்கிற அப்பத்தையும், ஆரோனும் அவன் குமாரரும் ஆசரிப்புக்கூடாரத்தின் வாசலிலே புசிக்கக்கடவர்கள்.

33. அவர்களைப் பிரதிஷ்டைபண்ணிப் பரிசுத்தப்படுத்தும்பொருட்டு, அவைகளால் பாவநிவிர்த்தி செய்யப்பட்டபடியால், அவைகளை அவர்கள் புசிக்கக்கடவர்கள்; அந்நியனோ அவைகளைப் புசிக்கலாகாது; அவைகள் பரிசுத்தமானவைகள்.

34. பிரதிஷ்டையின் மாம்சத்திலும் அப்பத்திலும் ஏதாகிலும் விடியற்காலம் மட்டும் மீந்திருந்ததானால், அதை அக்கினியாலே சுட்டெரிப்பாயாக; அது புசிக்கப்படலாகாது, அது பரிசுத்தமானது.

35. இந்தப்பிரகாரம் நான் உனக்குக் கட்டளையிட்டபடி எல்லாவற்றையும் நீ ஆரோனுக்கும் அவன் குமாரருக்கும் செய்வாயாக; ஏழுநாளளவும் நீ அவர்களைப் பிரதிஷ்டைபண்ணி,

36. பாவநிவிர்த்திக்காக ஒவ்வொருநாளிலும் ஒவ்வொரு காளையைப் பாவநிவாரண பலியாகப் பலியிட்டு; பலிபீடத்துக்காகப் பிராயச்சித்தம் செய்த பின், அந்தப் பலிபீடத்தைச் சுத்திசெய்ய வேண்டும்; அதைப் பரிசுத்தப்படுத்தும்படி அதை அபிஷேகம் பண்ணக்கடவாய்.

37. ஏழுநாளளவும் பலிபீடத்திற்காகப் பிராயச்சித்தஞ்செய்து, அதைப் பரிசுத்தமாக்கக்கடவாய்; பலிபீடமானது மகா பரிசுத்தமாயிருக்கும்; பலிபீடத்தைத் தொடுகிறதெல்லாம் பரிசுத்தமாகும்.

38. பலிபீடத்தின்மேல் நீ பலியிடவேண்டியது என்னவெனில்; இடைவிடாமல் ஒவ்வொருநாளிலும் ஒருவயதான இரண்டு ஆட்டுக்குட்டிகளைப் பலியிடவேண்டும்.

39. ஒரு ஆட்டுக்குட்டியைக் காலையிலும், மற்ற ஆட்டுக்குட்டியை மாலையிலும் பலியிடுவாயாக.

40. ஒரு மரக்காலிலே பத்திலொரு பங்கானதும், இடித்துப் பிழிந்த காற்படி எண்ணெயிலே பிசைந்ததுமாகிய மெல்லிய மாவையும், பானபலியாகக் கால்படி திராட்சரசத்தையும், ஒரு ஆட்டுக்குட்டியுடனே படைப்பாயாக.

41. மற்ற ஆட்டுக்குட்டியை மாலையிலே பலியிட்டு, காலையிலே செலுத்தின போஜனபலிக்கும் பானபலிக்கும் ஒத்தபிரகாரம் அதைக் கர்த்தருக்குச் சுகந்த வாசனையான தகனபலியாகப் படைக்கக்கடவாய்.

42. உன்னுடனே பேசும்படி நான் உங்களைச் சந்திக்கும் இடமாயிருக்கிற ஆசரிப்புக் கூடாரத்தினுடைய வாசலாகிய கர்த்தருடைய சந்நிதியிலே, உங்கள் தலைமுறைதோறும் செலுத்தப்படவேண்டிய நித்திய சர்வாங்க தகனபலி இதுவே.

43. அங்கே இஸ்ரவேல் புத்திரரைச் சந்திப்பேன்; அந்த ஸ்தலம் என்னுடைய மகிமையினால் பரிசுத்தமாக்கப்படும்.

44. ஆசரிப்புக் கூடாரத்தையும் பலிபீடத்தையும் நான் பரிசுத்தமாக்குவேன்; எனக்கு ஆசாரிய ஊழியம் செய்யும்படிக்கு, ஆரோனையும் அவன் குமாரரையும் பரிசுத்தப்படுத்தி,

45. இஸ்ரவேல் புத்திரரின் நடுவே நான் வாசம்பண்ணி, அவர்களுக்குத் தேவனாயிருப்பேன்.

46. தங்கள் நடுவே நான் வாசம்பண்ணும்படி, தங்களை எகிப்துதேசத்திலிருந்து புறப்படப்பண்ணின நான் தங்கள் தேவனாகிய கர்த்தர் என்று அவர்கள் அறிவார்கள்; நானே அவர்கள் தேவனாகிய கர்த்தர்.