Isaiah 56 in Tamil

Isaiah 56

1. கர்த்தர் சொல்லுகிறார்: நீங்கள் நியாயத்தைக் கைக்கொண்டு, நீதியைச் செய்யுங்கள்; என் இரட்சிப்பு வரவும், என் நீதி வெளிப்படவும் சமீபமாயிருக்கிறது.

2. இப்படிச் செய்கிற மனுஷனும், இதைப் பற்றிக்கொண்டிருந்து, ஓய்வுநாளைப் பரிசுத்தக் குலைச்சலாக்காதபடி ஆசரித்து, ஒரு பொல்லாப்பையும் செய்யாதபடி தன் கையைக் காத்துக்கொண்டிருக்கிற மனுபுத்திரனும் பாக்கியவான்.

3. கர்த்தரைச் சேர்ந்த அந்நியபுத்திரன்: கர்த்தர் என்னைத் தம்முடைய ஜனத்தைவிட்டு முற்றிலும் பிரித்துப்போடுவாரென்று சொல்லானாக; அண்ணகனும்: இதோ, நான் பட்டமரமென்று சொல்லானாக.

4. என் ஓய்வுநாட்களை ஆசரித்து, எனக்கு இஷ்டமானவைகளைத் தெரிந்துகொண்டு, என் உடன்படிக்கையைப் பற்றிக்கொள்ளுகிற அண்ணகர்களைக் குறித்துக் கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்:

5. நான் அவர்களுக்கு என் ஆலயத்திலும், என் மதில்களுக்குள்ளும் குமாரருக்கும் குமாரத்திகளுக்குமுரிய இடத்தையும் கீர்த்தியையும்பார்க்கிலும், உத்தம இடத்தையும் கீர்த்தியையும் கொடுப்பேன், என்றும் அழியாத நித்திய நாமத்தை அவர்களுக்கு அருளுவேன்.

6. கர்த்தரைச் சேவிக்கவும், கர்த்தருடைய நாமத்தை நேசிக்கவும், அவருக்கு ஊழியக்காரராயிருக்கவும், அவரைச் சேர்ந்து, ஓய்வுநாளைப் பரிசுத்தக்குலைச்சலாக்காதபடி ஆசரித்து, என் உடன்படிக்கையைப் பற்றிக்கொண்டிருக்கிற அந்நியபுத்திரர் அனைவரையும்,

7. நான் என் பரிசுத்த பர்வதத்துக்குக் கொண்டுவந்து: என் ஜெபவீட்டிலே அவர்களை மகிழப்பண்ணுவேன்; அவர்களுடைய சர்வாங்கதகனங்களும், அவர்களுடைய பலிகளும், என் பலிபீடத்தின்மேல் அங்கிகரிக்கப்பட்டிருக்கும்; என்னுடைய வீடு சகல ஜனங்களுக்கும் ஜெபவீடு என்னப்படும்.

8. இஸ்ரவேலில் தள்ளுண்டவர்களைச் சேர்க்கிற கர்த்தராகிய ஆண்டவர்: அவனிடத்தில் சேர்க்கப்பட்டவர்களையல்லாமல் இன்னும் அவனிடத்தில் சேர்ப்பேன் என்கிறார்.

9. வெளியில் சஞ்சரிக்கிற சகல மிருகங்களே, காட்டிலுள்ள சகல மிருகங்களே, பட்சிக்க வாருங்கள்.

10. அவனுடைய காவற்காரர் எல்லாரும் ஒன்றும் அறியாத குருடர்; அவர்களெல்லாரும் குலைக்கமாட்டாத ஊமையான நாய்கள்; தூக்கமயக்கமாய்ப் புலம்புகிறவர்கள், படுத்துக்கொள்ளுகிறவர்கள், நித்திரைப் பிரியர்;

11. திருப்தியடையாமலிருக்கும் பெருவயிற்று நாய்கள்; பகுத்தறிவில்லாத மேய்ப்பர்; அவர்களில் ஒவ்வொருவனும் தன் தன் வழியையும், அவனவன் தன் தன் மூலையிலிருந்து தன் தன் பொழிவையும் நோக்கிக்கொண்டிருக்கிறான்.

12. வாருங்கள், திராட்சரசத்தைக் கொண்டுவருவேன், மதுவைக் குடிப்போம்; நாளையத்தினம் இன்றையத்தினம்போலவும், இதற்கு அதிகமாகவும் இருக்கும் என்பார்கள்.