Psalm 10 in Tamil

Psalm 10 in Tamil, சங்கீதம் 10 பைபிள் வசனம் – Read Holy Bible Book of Psalms Chapter 10 in Tamil with English Reference.

1. கர்த்தாவே, ஏன் தூரத்தில் நிற்கிறீர்? ஆபத்து நேரிடுகிற சமயங்களில் நீர் ஏன் மறைந்திருக்கிறீர்?

2. துன்மார்க்கன் தன் பெருமையினால் சிறுமைப்பட்டவனைக் கடூரமாய்த் துன்பப்படுத்துகிறான்; அவர்கள் நினைத்த சதிமோசங்களில் அவர்களே அகப்படுவார்கள்.

3. துன்மார்க்கன் தன் உள்ளம் இச்சித்ததைப் பெற்றதினால் பெருமைபாராட்டி, பொருளை அபகரித்துத் தன்னைத்தான் போற்றி, கர்த்தரை அசட்டைபண்ணுகிறான்.

4. துன்மார்க்கன் தன் கர்வத்தினால் தேவனைத் தேடான்; அவன் நினைவுகளெல்லாம் தேவன் இல்லையென்பதே.

5. அவன் வழிகள் எப்போதும் கேடுள்ளவைகள்; உம்முடைய நியாயத்தீர்ப்புகள் அவன் பார்வைக்கு எட்டாமல் மிகவும் உயரமாயிருக்கிறது; தன் எதிராளிகளெல்லார்மேலும் சீறுகிறான்.

6. நான் அசைக்கப்படுவதில்லை, தலைமுறை தலைமுறைதோறும் தீங்கு என்னை அணுகுவதில்லையென்று தன் இருதயத்தில் சொல்லிக்கொள்ளுகிறான்.

7. அவன் வாய் சபிப்பினாலும் கபடத்தினாலும் கொடுமையினாலும் நிறைந்திருக்கிறது; அவன் நாவின்கீழ் தீவினையும் அக்கிரமமும் உண்டு.

8. கிராமங்களின் ஒளிப்பிடங்களிலே பதிவிருந்து, மறைவிடங்களிலே குற்றமற்றவனைக் கொல்லுகிறான்; திக்கற்றவர்களைப் பிடிக்க அவன் கண்கள் நோக்கிக்கொண்டிருக்கிறது.

9. தன் கெபியிலிருக்கிற சிங்கத்தைப்போல மறைவில் பதிவிருக்கிறான்; ஏழையைப் பிடிக்கப் பதிவிருந்து, ஏழையைத் தன் வலைக்குள் இழுத்துப் பிடித்துக்கொள்ளுகிறான்.

10. திக்கற்றவர்கள் தன் பலவான்கள் கையில் விழும்படி அவன் பதுங்கிக்கிடக்கிறான்.

11. தேவன் அதை மறந்தார் என்றும், அவர் தம்முடைய முகத்தை மறைத்து, ஒருக்காலும் அதைக் காணமாட்டார் என்றும், தன் இருதயத்திலே சொல்லிக்கொள்ளுகிறான்.

12. கர்த்தாவே, எழுந்தருளும்; தேவனே, உம்முடைய கையை உயர்த்தும்; ஏழைகளை மறவாதேயும்.

13. துன்மார்க்கன் தேவனை அசட்டைபண்ணி: நீர் கேட்டு விசாரிப்பதில்லை என்று தன் இருதயத்தில் சொல்லிக்கொள்வானேன்.

14. அதைப் பார்த்திருக்கிறீரே! உபத்திரவத்தையும் குரோதத்தையும் கவனித்திருக்கிறீரே; நீர் பதிலளிப்பீர்; ஏழையானவன் தன்னை உமக்கு ஒப்புவிக்கிறான்; திக்கற்ற பிள்ளைகளுக்குச் சகாயர் நீரே.

15. துன்மார்க்கனும் பொல்லாதவனுமாயிருக்கிறவனுடைய புயத்தை முறித்துவிடும்; அவனுடைய ஆகாமியம் காணாமற்போகுமட்டும் அதைத் தேடி விசாரியும்.

16. கர்த்தர் சதாகாலங்களுக்கும் ராஜாவாயிருக்கிறார்; புறஜாதியார் அவருடைய தேசத்திலிருந்து அழிந்துபோவார்கள்.

17. கர்த்தாவே, சிறுமைப்பட்டவர்களுடைய வேண்டுதலைக் கேட்டிருக்கிறீர்; அவர்கள் இருதயத்தை ஸ்திரப்படுத்துவீர்.

18. மண்ணான மனுஷன் இனிப் பலவந்தஞ்செய்யத் தொடராதபடிக்கு, தேவரீர் திக்கற்ற பிள்ளைகளுக்கும் ஒடுக்கப்பட்டவர்களுக்கும் நீதிசெய்ய உம்முடைய செவிகளைச் சாய்த்துக்கேட்டருளுவீர்.

Tamil Bible Online is best resource for Christian community to read Tamil bible.  Tamil bible verses, Tamil Christian song lyrics, Tamil Christian songs and other resource online. We collect data from various online resources to facilitate our users… Keep supporting us